Sunday, 12 July 2015

நண்டு குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பு சுவைத்ததுண்டா? ஆம், செட்டிநாடு ரெசிபிக்களில் நண்டு குழம்பும் உள்ளது. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். அதுமட்டுமின்றி, நண்டு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே விடுமுறை நாட்களில் இதனை தவறாமல் செய்து சுவைத்துப் பாருங்கள். சரி, இப்போது செட்டிநாடு ஸ்டைல் நண்டு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 


 
 
தேவையான பொருட்கள்: 
 
நண்டு - 1/2 கிலோ 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது) 
சீரகம் - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1 டீஸ்பூன் 
பூண்டு - 5 பல் 
மிளகு - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
மல்லித் தூள் - 3 டீஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு, மிளகு கலவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 
 
அடுத்து, அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் கழுவி வைத்துள்ள நண்டு சேர்த்து மூடி வைக்க வேண்டும். 
 
நண்டு நன்கு வெந்த பின், அதில் கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!!!

சில்லி பன்னீர் ...

பன்னீர் பிரியர்களுக்கு ஒரு அருமையான மற்றும் காரசாரமான சைனீஸ் ஸ்டைல் ரெசிபி ஒன்றை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் சில்லி பன்னீர். இந்த சில்லி பன்னீர் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருப்பதுடன், அருமையான சுவையையும் கொண்டது. அந்த சில்லி பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால் தொடர்ந்து படித்து பாருங்கள். 


 
 
தேவையான பொருட்கள்: 
 
 
பன்னீர் - 500 கிராம் 
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் 
பூண்டு - 5 பற்கள் 
வெங்காயம் - 2 (நறுக்கியது) 
குடைமிளகாய் - 2 (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது) 
வெஜிடேபிள் ஸ்டாக் - 1/2 கப் 
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன் 
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
அஜினமோட்டோ - 1 சிட்டிகை 
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு 
 
 
செய்முறை: 
 
 
முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, உப்பு, மிளகு தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை சோள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டுகளை தட்டிப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வதக்க வேண்டும். 
 
பின்பு அதில் பச்சை மிளகாய், வெஜிடேபிள் ஸ்டாக் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் அஜினமோட்டோ, சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். 
 
பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவை, 1/4 கப் தண்ணீரில் கலந்து, அதனை வாணலியில் ஊற்றி 4-5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். 
 
இறுதியில் அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான சில்லி பன்னீர் ரெடி!!!